Wednesday, December 28, 2005

7காலம் போற போக்கைப் பாத்தா

7.காலம் போற போக்கைப் பாத்தா
*************************************

காலம் போற போக்கைப் பாத்தா
யாரு பேச்சைக் கேட்பது?
கவலைப்பட்டு என்ன பண்ண
ஆனபடி ஆகுது!

கரும்பினிலும் நுனிக்கரும்பு
வேம்புபோலக் கசக்குது!
கருணையுள்ள நெஞ்சங்கூட
தரும வாழ்வை வெறுக்குது!

இரும்புகூட நெருப்பில் போட்டால்
மெழுகுபோல உருகுது!
இரண்டு எண்ணங்கொண்ட நெஞ்சில்
இன்பதுன்பம் பெருகுது!

வேங்கை ஒன்று மாமிசத்தை
வெறுத்ததாகக் கூறுது!
வெள்ளாடு சைவங்கெட்டு
வேறுபாதை போகுது!

வாழ்ந்த வாழ்வு சலிக்கும்போது
மாற்றும் எண்ணம் தோணுது!
வாடைக் காற்றில் நடுங்கும் நெஞ்சு
கோடைக்காக ஏங்குது!

ஏன் பிறந்தான் பாவி என்று
சிலரைப் பார்த்து ஏசுது!
இறந்துவிட்டான் தேவன் என்று
சிலரை எண்ணி ஏங்குது!

******** கவிஞர் கண்ணதாசன்

0 Comments: